பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் எங்கும் வழங்கப்பட்டு வருகிறது.
திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சி.வி. கணேசன், தமது திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட கழுதூர் கீழ்ச்செருவாய், திட்டக்குடி உட்பட பல்வேறு ஊர்களில் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு பைகளை வழங்கினார். முதலில் தனது சொந்த ஊரான கழுதூரில் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு வழங்கும் போது அமைச்சர் கணேசன் கண்ணீர் விட்டு அழுதார். அதைப் பார்த்த பொதுமக்களும் கண் கலங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; “எனது துணைவியார் பவானியம்மாள் டிசம்பர் 9ஆம் தேதி இறந்துபோனார். அதனால் எனது சொந்த ஊரான கழுதூர் கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது. எனது சொந்த கிராம மக்கள் எப்போதும் என்னுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்; எந்த நிலையிலும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். இந்தக் கிராமத்தில் உள்ளவர்களுக்கும், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் நான் என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி மக்கள் பணியில் எந்தவித தொய்வும் இன்றி சிறப்பாகப் பணியாற்றுவேன்” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன், சின்னசாமி உட்பட ஏராளமான திமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.