பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1000 ரூபாய் ரொக்கமும் தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இதற்காக ரூ.2430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மொத்தம் 2,19,33,342 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த பொங்கலுக்கான பரிசு தொகுப்பை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் கூடுவதைத் தடுக்க ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மக்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வீடுகள்தோறும் டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பிறகு தினமும் 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் வாரியாக பொருட்களை வழங்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் உள்ள கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு உள்பட பல நுகர்பொருள் கிடங்குகளுக்குச் சென்று பொங்கலுக்காகக் கொடுக்கப்படும் பச்சரிசியை ஆய்வு செய்தார். அவருடன் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.