திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்பயிற்சி வழிகாட்டு மையம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 2,410 பேருக்குப் பணி நியமன ஆணையை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 7,020 பேர் பங்கேற்றனர். முகாமில் 175 நிறுவனங்கள் பங்கேற்று பணியாளரைத் தேர்வு செய்தன. அதன் மூலம் மொத்தம் 2,410 பேருக்குப் பணி நியமன ஆணையை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
அதன்பின் வேலைவாய்ப்பு முகாமில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுபவர்களில் ஆண்களும், பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் சேர்த்து ஆக மொத்தம் 7 ஆயிரத்து 20 பேர்கள் கலந்துகொண்டார்கள். இதில் 2 ஆயிரத்து 410 பெயர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலை வழங்கும் பணி இன்று முடியவில்லை. படிக்காதவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு அவர்களுக்குப் பணி கிடைக்க முயற்சி எடுக்கப்படும்.
பணியை விரும்பாதவர்களுக்கு அவர்கள் விரும்பும் பணி கிடைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். அரசுப் பணியைத்தான் பெரும்பான்மையான இளைஞர்கள் விரும்புகின்றனர். அதற்காக ஒட்டன்சத்திரத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.போன்ற அகில இந்திய பணிகளின் தேர்வுக்கான பயிற்சி மையம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மையம் வாரியம் நடத்தும். தொகுதி 1 முதல் அனைத்து பணிகளின் தேர்வுக்கான பயிற்சி மையமும் ஐ.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்திடும் மையமும் விரைவில் தொடங்கப்படும்” என்று கூறினார்.
இதில், வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சரவணன், வேலைவாய்ப்பு துறை இயக்குநர் பிரபாவதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, ஆர்.டி.ஒ. ஆனந்தி, தாசில்தார் முத்துசாமி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன் ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள், கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.