ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருள் பரிமளா ஆகிய தம்பதியர்களின் இரண்டாவது மகன் 13 வயதான ராகவேந்திரா. கடந்த 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நவம்பர் 29 ஆம் தேதி மருத்துவமனையில் ராகவேந்திரா மூளைச் சாவு அடைந்தார். கண்ணீர் விட்டு கதறினர் பெற்றோர். அந்த துயர நிலையில் ராகவேந்திராவின் பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து ராகவேந்திராவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்து மருத்துவர்களிடம் தெரிவித்தனர். என் மகனால் சிலருக்கு வாழ்வு கிடைக்கட்டும் என்றனர்.
அதனைத்தொடர்ந்து விதிகள் படி உறுப்பு தானம் செய்யப்பட்டது. அதன்பின் ராகவேந்திராவின் உடல் இன்று இறுதி நல்லடக்கம் செய்வதற்காக சர்வந்தாங்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகவேந்திராவின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து தமிழக அரசின் ஆணையின்படி, சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அரசு மரியாதையினை செலுத்தினர். உடல் உறுப்பு தானம் செய்த ராகவேந்திராவின் பெற்றோர்களிடம் அமைச்சர் ஆர் காந்தி ஆறுதல் தெரிவித்ததோடு உடல் உறுப்பு தானம் செய்த அவர்களின் செயல்களை கண்டு இரு கரங்கள் கூப்பி தலை வணங்கி கண்ணீர் விட்டு அவர்களின் செயலை வெகுவாக பாராட்டினார். மகனின் உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோரிடம் அமைச்சர் கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் விட்டு பாராட்டிய சம்பவம் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அனைவரின் மத்தியிலும் ஆழ்ந்த சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.