தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் நேற்று முன்தினம் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா தேரோட்டத்தின் பொழுது நிகழ்ந்த மின் விபத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டதோடு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இன்று இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''நடக்கூடாத ஒரு காரியம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்துவிட்டது. தஞ்சை திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் களிமேடு என்ற கிராமத்தில் 94 வருடம் தொடர்ந்து நடந்த ஒரு மடத்திற்கு சொந்தமான இந்த தேர் திருவிழா முடிகின்ற வேளையில் காலை 3 மணியிலிருந்து 3.10 மணிக்குள் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது. காலை 5 மணிக்கு முதல்வர் தொலைப்பேசியிலேயே என்னை தொடர்பு கொண்டார். 'உடனடியாக நீ அங்கே சென்று அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டார். அதற்கு முன்பு பல்வேறு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான உத்தரவுகளை அவர் வழங்கியிருக்கிறார் என்று சொன்னாலும் அவர் அதிகாரிகளுக்கு எவ்வளவு சுதந்திரம் வழங்கியிருக்கிறார் என்பதை என்னால் உணர முடிகின்றது. 'நீ முதலில் செல்...' நானே இரங்கல் தீர்மானத்தை வாசித்துவிட்டு என்ன நிவாரணமோ அதை அறிவித்துவிட்டு வருகிறேன்' என்று சொன்னார்.
உடனடியாக அங்குச் சென்றோம். அங்கே பள்ளி குழந்தைகள் உட்பட 11 பேரின் சடலங்கள் இருந்தது. இந்த 11 மாத காலத்தில் நான் பல பள்ளி நிகழ்வுகளில் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகளையும், மெடல்களையும், மாலைகளையும் சூட்டியுள்ளேன் என்று சொன்னாலும் அந்த மார்ச்சுவரியில் நான் வைத்த முதல் மாலை 8 வகுப்பு படிக்க கூடிய ஒரு மாணவன். மருத்துவமனைக்கு வந்தால் 11 பேரின் உடலுக்கும் ஒரே இடத்தில் மரியாதை செலுத்திவிடலாம் என்று முதல்வரிடம் சொன்னேன். ஆனால் முதல்வர் இல்லை இல்லை உயிரிழந்தவர்களின் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று அவர்களின் குடும்பத்தார், உறவினர்களிடம் ஆறுதல் சொன்னால்தான் என்னை நானே ஓரளவிற்குத் தேற்றிக்கொள்ள முடியும் என்று சொன்னார்'' என நா தழுதழுக்கப் பேசினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.