மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் முன்னாள் ஒன்றிய சேர்மன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளராக உள்ளார். 4 முறை மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்தவர்.
இந்நிலையில் மணப்பாறை காவல் நிலையத்தில் உறவினர் பிரச்னை குறித்து இவர் பேச வந்தபோது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கென்னடி, நான் டி.எஸ்.பியை பாக்க வெளியே போறேன்.. பிறகு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே பழனிச்சாமி நான் ஆளும்கட்சிகாரன், மா.செ.வாக இருந்தவன், உட்கார வச்சு என்னான்னுகூட கேக்க மாட்டேங்கிறீங்க, என்று ஆதங்கமா கேட்டுள்ளார்.
உடனே இன்ஸ் அவசரமா வெளியே போகிறேன் பிறகு பேசுறேன்.. நீங்க புகார் கொடுங்க என்று சொல்லி கொண்டே கிளம்ப, ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி என்னயா நா சொன்னா நடவடிக்கை எடுக்க மாட்டியா என்று ஒருமையில் பேச, பதிலுக்கு இன்ஸ்பெக்டரும் என்னயா இது என்னோட ஸ்டேசன்ல வந்து என்னையே மரியாதை இல்லாம பேசுறீயா என்று கடுமையாக தாக்க ஆரம்பிக்க.. இதில் பழனிச்சாமியின் சட்டை எல்லாம் கிழிந்தது.
பழனிசாமி தாக்கப்பட்டு கிழிந்த சட்டையுடன் வெளியே வந்தது குறித்து தகவலறிந்த வையம்பட்டி, மருங்காபுரி, அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையம் முன்பு திரண்டு இன்ஸ்பெக்டர் கென்னடியை கைது செய்யக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டிஎஸ்பி ஆசைத்தம்பி சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து அதிமுகவினர் 2 மணி நேர தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேலிடம் கட்சிகாரர்கள் புகார் செய்ததனால் உடனே மா.செ. ரத்தினவேல் எம்.பி. ஐ.ஜியிடம் புகார் செய்தார். அடித்தது உண்மை தான் என்பதை உளவு பிரிவு மூலம் உறுதி செய்த ஐ.ஜி இன்ஸ் கென்னடியை காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றினார்கள்.
ஆளும் கட்சியை தாக்கிய இன்ஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.