Skip to main content

“மத உணர்வுகளை புண்படுத்தக் கூடிய வேலையை செய்பவர்கள் பாஜகவினர்” - அமைச்சர் அன்பில் மகேஷ்    

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

minister Anbil Mahesh talk about bjp

 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் செந்தில் வேல் எழுதிய ‘நான் ஏன்  பா.ஜ.கவை எதிர்க்கிறேன்" எனும் நூல் அறிமுக விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.     

 

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, “சந்திரயான் 3 வெற்றி பெற்றதற்கு மோடிதான் காரணம் என விளம்பரம் செய்பவர்கள், அதன் வெற்றிக்கு காரணம் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள்தான் என்பதை சொல்வதில்லை. மதங்களையும், மக்களின் வாழ்வியலையும் பிரித்துணரும் குணம் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழர்கள் இயற்றியுள்ள பக்தி இலக்கியங்கள் கூட அறத்திற்கும், தமிழுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் நாங்கள் இஸ்லாமிய பகுதியில் பேசும்போது பாங்கு சத்தம் ஒலித்தது. உடனே எங்கள் பேச்சை நிறுத்தினோம். சத்தம் முடிந்தவுடன் மீண்டும் எங்கள் உரையை தொடங்கினோம். இதுவே நாளை பாஜக ஆளுகின்ற நிலை வந்தது என்றால் இவர்கள் நிறுத்த மாட்டார்கள்; பாங்கு சத்தத்தை நிறுத்த ஒரு கூட்டம் ஓடிச்செல்லும். மத உணர்வுகளை புண்படுத்தக் கூடிய வேலையை செய்பவர்கள். அதனால்தான் அவர்களை நான் எதிர்க்க வேண்டும் என சொல்கிறேன்.     

 

மணிப்பூர் கலவரத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஆளும் பா.ஜ.க முதலமைச்சர் எவ்வித அக்கறையும் இல்லாமல் ‘இதுபோல் தினசரி ஏராளமான சம்பவங்கள் நடக்கிறது. எல்லாவற்றையும் எப்படி கண்காணிக்க முடியும்’ எனக் கேட்டுள்ளார். இவர்களுக்கு ஏன் எடப்பாடி பழனிசாமி ஒத்துழைப்பு வழங்குகிறார் என்றால், அவரும் இதே போல கேட்டவர்தான்.  தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தின் போது, ‘நானே செய்தி சேனல் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என மணிப்பூர் முதலமைச்சர் போல அக்கறையின்றி சொன்னவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.  இந்தியா கூட்டணி வென்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று சொல்லியுள்ளார் முதலமைச்சர்” என பேசினார்.   

 

இந்த விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்