தமிழ்நாடு மகப்பேறு மருத்துவக் கூட்டமைப்பு, பள்ளிக் கல்வித்துறையோடு இணைந்து நடத்திய வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது. நவம்பர் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான ஒரு வாரம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை ஒட்டி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில், 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஊராட்சி முகமையின் திட்ட இயக்குநர் தேவநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தன் சுத்தம், ஆளுமை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்வினை ஆற்றுதல், பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து விடுபட விழிப்புணர்வு எண்களான 1098, 14417 ஆகிய எண்களைப் பயன்படுத்த தயங்காதிருத்தல் உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவிகளுக்கு இணையதள காணொளி வாயிலாக நடத்தப்படும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் துவக்கமாக திருச்சியில் இக்கருத்தரங்கு இன்று தொடங்கப்பட்டுள்ளது. கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “எனக்கு பெண் குழந்தைகள் இல்லை. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளும் எனக்கு பெண் குழந்தைகளே. உங்களைக் காப்பது எங்களது கடமை ஆகும்.
நமது தமிழ்நாடு அரசு, அமைச்சர் பெருமக்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் உங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இருக்கிறோம். எனவே எக்காரணம் கொண்டும் பெண் குழந்தையாகிய உங்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையையும் சகித்துக் கொண்டு இருக்கக் கூடாது. மன உறுதியோடு அவற்றினை எதிர்த்து நில்லுங்கள். அதற்கு நான் உங்களுக்கு துணை நிற்கிறேன்” என்று உருக்கமாக கூறினார். மேலும், மாணவர் மனசு பெட்டி வாயிலாகப் பெண் குழந்தைகளின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் மிக முக்கிய நோக்கம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு மதுரையில் இருந்து வருகை புரிந்த மருத்துவக் குழுவினர் வளர் இளம் பருவ பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் அவர்களது ஆரோக்கியம் குறித்தும் அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தன்சுத்தம், பெண் குழந்தைகளுக்கான ஆளுமை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து விடுபட விழிப்புணர்வு, எண்களைப் பயன்படுத்துதல் முதலியவை குறித்து விரிவாக கருத்துக்களை வழங்கினர். மேலும் குழந்தைகளுடனான கலந்துரையாடல்கள் மூலம் மாணவிகளுக்குத் தேவையான பல்வேறு அறிவுரைகளை வழங்கியதோடு அவர்களுக்குப் பல்வேறு சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தனர். பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சாந்தி மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார்.