தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக நடைபெற்ற வினாடி வினாப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களை ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்லும் திட்டம் தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக ஆன்லைன் மூலம் நடைபெற்ற வினாடி வினாப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 67 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வினாடி வினாப் போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளைப் பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயில் மற்றும் சரபோஜி மஹால் போன்ற இடங்களுக்குப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டு மறுபடியும் திருச்சிராப்பள்ளி வந்து ஆசிரியர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 67 மாணவர்களும் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி போன்ற இடங்களுக்கு 10.11.2022 முதல் 13.11.2022 வரை நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று அழைத்து செல்லப்பட்டனர். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், இணை இயக்குனர் அமுதவல்லி உள்ளிட்ட அதிகாரிகள், 5 ஆசிரியர்கள், 34 மாணவர்கள், 33 மாணவிகள் என மொத்தம், 75 பேர் இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபாய் கிளம்பிச் சென்றனர். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி உட்பட கல்வித் தொடர்பான பல்வேறு இடங்களை நேரில் கண்டுகளிக்க உள்ளனர். வரும் 14-ம் தேதி அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்தடைகின்றனர்.
இதனிடையே, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதைத் தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். EWS இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
புதிய கல்விக் கொள்கையைப் பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார். ஆனால் புதிய கல்விக் கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க குழு அமைத்துள்ளார். அதை அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வந்த பின்பு நாங்கள் எதைப் பின்பற்றுகிறோம் என்பது தெரியும்” எனத் தெரிவித்தார்.