சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி பகுதியில் வசித்த பொதுமக்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியின்போது 147 பேர் வீடுகளை இழந்தனர். இதனை அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது. ஆனால் அதற்குப் பட்டா இல்லாமல் அந்த வீடுகளில் வசித்து வந்தனர்.
அவர்கள், வருவாய்த் துறையினரிடம் கடந்த பல ஆண்டுகளாகப் பட்டா கேட்டு விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று அவர்களுக்குக் கிள்ளையில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குக் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 147 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் 10 பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டை மற்றும் ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர், பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி, கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.