"கோயில் நிலத்தில் 1 சென்ட் இடத்தை நான் ஆக்கிரமித்ததாக ஹெச்.ராஜா நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் என அதிமுக எம்.பி அருண்மொழித்தேவன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் கோயில் நில ஆக்கிரமிப்புகள் குறித்து ஹெச்.ராஜா பேசும்போது,"அந்த திட்டக்குடி விஷயம் அந்தக் திருக்குளத்தை ஆக்கிரமிச்சது யாரு.? அருண்மொழித்தேவன் சிட்டிங் எம்.பி.. அதெல்லாம் என்டர்பை பண்ணியிருக்கு. ஏங்கிட்ட எல்லா டாக்குமெண்ட்டும் இருக்கு.ஒரு எம்.பி.யாக இருக்கிற ஆள். சிட்டிங் எம்.பி கோயில் நிலத்தை 200 ஏக்கர் அபகரிச்சி இருக்கான்.இதுல எரியற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? கழகம் என்றாலே கலகம்தான்" என்று பேசியுள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த பேச்சினை சமூக வலைதளங்களில் சிலர் எடுத்து பதிவிட்டுள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்து கடலூர் எம்பி அருண்மொழித்தேவன் இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பாக செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், " ஹெச்.ராஜா மக்கள் பிரதிநிதி ஆகிய என்னைப் பற்றி உண்மைக்கு மாறான, ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டினை எழுப்பியிருக்கிறார். அவர் கூறியுள்ள குற்றச்சாட்டில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை.
அப்படியே ராஜா கூறுவதில் இருந்து நான் கோயில் இடத்தை ஒரு ஏக்கர் அல்ல, ஒரு செண்ட் அல்லது ஒரு சதுர அடியை கோயில் இடத்தை நான் அபகரித்ததாக நிருபித்தால் எனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலை விட்டே விலகி விடுகிறேன். அப்படி ராஜா சொன்னதை நிருபிக்க முடியவில்லை என்றால், என்ன செய்வார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவும் "என கேட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து தன்னைப் பற்றி அவதூறாக பேசிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண்மொழித்தேவன் புகார் அளித்துள்ளார்.