9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. அதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் தருவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள டி. அத்திப்பாக்கம் என்ற இடத்தில் திருக்கோவிலூர் டிஎஸ்பி கங்காதரன், தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாசில்தார் கண்ணன் தலைமையில் ரிஷிவந்தியம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஏட்டு சுமதி, ஷகிலா ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான சாக்கு மூட்டைகள் இருந்தன. அதைக் கண்டு சந்தேகமடைந்த பறக்கும் படையினர், அந்த மூட்டைகளை சந்தேகத்தின் பேரில் பிரித்துப் பார்த்தனர். அதனுள்ளே ஐந்து ரூபாய் நாணயங்கள் இருந்தன. அந்த மினி லாரியில் மொத்தம் 80 சாக்கு மூட்டைகளில் ஒரு மூட்டைக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 8 லட்சம் மதிப்பு கொண்ட 5 ரூபாய் நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எந்த ஆவணமும் இல்லாமல் 8 லட்சம் மதிப்புள்ள நாணய மூட்டைகளை மினி லாரியில் கொண்டுவந்ததைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மினி லாரி டிரைவரைப் பிடித்து, இந்த நாணய மூட்டைகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் யாரிடம் பெறப்பட்டு, எங்கு கொண்டு செல்லப்படுகிறது அல்லது கடத்திச் செல்லப்படுகிறதா என இப்படி பல்வேறு கோணங்களில் பறக்கும் படையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஒரு மினி லாரியில் 8 லட்சம் மதிப்புள்ள ஐந்து ரூபாய் நாணயங்கள் மூட்டை மூட்டையாக கடத்திவரப்பட்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.