
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியில் ஸ்ட்ரைட்ஸ் ஷாசன் லிமிடெட் எனும் மருந்து பொருட்களுக்கான வேதிப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.
தற்போது 4500 லீட்டர் வரை வேதிப்பொருள் தயாரிக்கும் இந்த நிறுவனம் 9150 லீட்டர் வேதிப் பொருட்கள் தயாரிக்கும் அளவிற்கு விரிவுப்படுத்த புதுச்சேரி அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சுழல் பாதிப்படையும் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடந்து வந்தது.
இந்நிலையில், நிறுவனத்தையொட்டியுள்ள பகுதி மக்களிடம் விரிவாக்கம் செய்வது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒரு தரப்பினர் நிறுவன விரிவாக்கத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு தரப்பினர் கருத்து கேட்பு நடைபெற்ற திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, வெளியேற்றப்பட்ட மக்கள் நிறுவனத்தின் வாயிலில் இருந்து கோஷம் எழுப்பினர். அந்தநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசினர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.