![mini marathon conducts for creating awareness for 100% voting](http://image.nakkheeran.in/cdn/farfuture/rkUpjohujLrdnXGRkPtjcFwgepWbORveP77y6cVupkw/1615787002/sites/default/files/inline-images/mini-marathon-2.jpg)
சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இணைந்து, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் தொடர் ஓட்டம் நடத்தியது. இந்த ஓட்டம் சிதம்பரம் நகரம் தெற்கு வீதியில் தொடங்கி மேலவீதி, வடக்குவீதி, கீழ வீதி வழியாக அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை அடைந்தது. இதனை கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் காவல் கண்காணிப்பாளர் இந்தத் தொடர் ஓட்டத்தில் காவல்துறையினருடன் கலந்துகொண்டார். 6 கிமீ தூரம் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து தொடர் ஓட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் வாழ்த்துரை வழங்கி, முதல் மூன்று இடங்களில் வந்த இளைஞர்களுக்கு ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
![mini marathon conducts for creating awareness for 100% voting](http://image.nakkheeran.in/cdn/farfuture/hIsmqCaE-S1mQ-HqXceU1XLzrnshJUS126f4zNNhm5Y/1615787028/sites/default/files/inline-images/mini-marathon-3.jpg)
அதேபோல் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களில் வந்தவர்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடர் ஓட்டத்தில் 15வது இடம்வரை வந்தவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக இசைக் கல்லூரி மாணவர்கள், அரசின் விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடினார்கள். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிகழ்ச்சியில் டிஜி என்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க் நிறுவனம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மற்றும் ரூ. 5 நாணயம் அடங்கிய அட்டையைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிதம்பரம் சார் ஆட்சியர், சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், டிஎஸ்பி லாமேக், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.