Skip to main content

'என் நெஞ்சில் அணையாமல் எரியும் லட்சியக் கனல்'-தவெக விஜய் தொண்டர்களுக்கு கடிதம்

Published on 04/10/2024 | Edited on 04/10/2024
 'The mind has started counting the days for the conference' - Thaveka Vijay's letter to the volunteers

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம், அரசியல் கட்சியை அறிவித்ததை தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என அடுத்தடுத்து நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் த.வெ.க. கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். தொடர்ந்து முதல் மாநாட்டை நடத்த தமிழக வெற்றி கழகம் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்ட ஏற்பாடுகளை கட்சியின் தலைமை மேற்கொண்டு வருகிறது. மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கட்சி தொண்டர்களுக்கு நடிகர் விஜய் ஒன்று அழைப்பு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே வணக்கம் உங்களை நானும் என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம் கூட இல்லை. ஏனெனில் நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில் தான் இந்த கடிதம். அதுவும் முதல் கடிதம்.

தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்காக அடிப்படை  தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். அதை அரசியல் ரீதியாக, சட்டபூர்வமாக உறுதியாக நிறைவேற்றி காட்ட வேண்டும். இதுதான் என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கும் ஒரு லட்சிய கனல். இன்று நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டு திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால் நம் அரசியல் களப்பணிகளுக்கான கால்கோள் விழா என்பது இதில் உள்ளார்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே? நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் எனில் இது நம்முடைய கொள்கை திருவிழா. அதுவும் வெற்றி கொள்கை திருவிழா. இப்படி சொல்லும் போதே ஒரு எழுச்சி உணர்வு நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது தன் தாய் மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பான நிகழ்வு தான். இந்த வேளையில் ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பொறுப்பான மனிதனை தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனை தான் நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாக திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். நம் கழகத்தினர் மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.

நம் கழகம் மற்ற அரசியல் கட்சிகள் போல சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்க பெரும்படை, இளஞ்சிங்க படை, சிங்க பெண்கள் படை, குடும்பங்கள் இணைந்த கூட்டு பெரும்படை. ஆகவே நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால் படையினர் ஓரிடத்தில் கூடினால் அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படியாகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதிக விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டும்போது தான் அவர்களுக்கு தெரியும் தமிழக வெற்றி கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்த அரசியல் களத்தில் வெற்றிக்காண போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்து கொள்வர்.

மக்கள் இயக்கமாக இருந்த நாம் மக்களோடு மக்களாக நின்று களமாடிய அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப்பணிகள் வேறு.அதற்கான நடைமுறைகள் வேறு. அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட விவேகமாக இருப்பது. மேலும் எதார்த்தமாக இருப்பதை விட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம். இவை அனைத்தையும் உள்வாங்கி உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளை தொடங்கி தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டு பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும், அது சார்ந்த சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்.

இந்நிலையில் மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கி விட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோஷ தருணங்களை இப்போதே மனம் அளவிடத் தொடங்கிவிட்டது.

வி.சாலை எனும் வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்