'நிவர்' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர்மழையால், சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு, சில தினங்களாக வினாடிக்கு 4,000 கன அடிக்கும் அதிகமாக நீர் வந்தது.
24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், 22 அடியை எட்ட இருந்ததால், முன்னெச்சரிக்கையாக இரண்டு நாளைக்கு முன்பு முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 9,000 கன அடி வரை நீர் வெறியேற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது புயல் கரையைக் கடந்ததோடு, மழை நின்றுள்ளதால் நீர்த் திறப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 550 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று அது மேலும் குறைந்து வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.