நெல்லை மாவட்டம் உடன்குடி அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த 'மிளா' எனும் அரிய வகை மானைப் பிடிக்க வனத்துறையினர் முயன்றபொழுது மான் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடன்குடியை ஒட்டியுள்ள கீழ பஜாரில் நேற்று இரவு ஒரு வணிக வளாகத்திற்குள் அரிய வகை மானான விளா மான் புகுந்தது. மான் குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
வனத்துறையினர் மானைப் பிடிப்பதற்குத் தேவையான உரிய உபகரணங்களைக் கொண்டு வரவில்லை என்று கூறப்படுகின்ற நிலையில், தீயணைப்புத் துறையினரிடம் இருந்த கயிறு ஒன்றை வாங்கி சுருக்கிட்டு அதன் மூலம் மானைப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது சுருக்குக் கயிறு மானின் கழுத்தில் மாட்டப்பட்ட நிலையில், திடீரென மான் ஓட முயன்றது. இதனால் கயிறு இறுகி அங்கேயே துடிதுடித்து மான் உயிரிழந்தது.
இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறையினரின் கவனக்குறைவால் இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்ததாக அக்கம் பக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.