தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான செல்ஃபோன்களை, லாரியுடன் ஒரு கும்பல் கடத்திச் சென்றதாகப் புகார் எழுந்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் தனியார் செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, ஆந்திராவுக்கு கன்டெய்னர் லாரியில் செல்ஃபோன் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. நள்ளிரவில் ஆந்திர எல்லையில், லிஃப்ட் கேட்டு ஏறிய 3 பேர், தங்களைத் தாக்கிவிட்டு, லாரியை கடத்திச் சென்றுவிட்டதாக, புத்தூர் காவல் நிலையத்தில் லாரி ஓட்டுனரும், கிளீனரும் புகார் அளித்திருக்கின்றனர். இதனிடையே, கடத்தப்பட்ட லாரி நகரி அருகே அனாதையாக நின்றது. அதில் இருந்த கன்டெய்னர் உடைக்கப்பட்டு, செல்ஃபோன் பண்டல்கள் அனைத்தும் திருடப்பட்டிருந்தது. லாரியை கடத்திய கும்பல், செல்ஃபோன்களை வேறு லாரியில் மாற்றி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும் லாரி டிரைவர்-கிளீனர் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. அவர்களிடம் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.