சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் நாளை டாஸ்மாக் கடைகள் சென்னையில் திறக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்ற நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகளை திறக்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதுக்கடையில் கிரில் பகுதிக்கு வெளியே கவுண்டர் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும். மதுப் பிரியர்கள் நிற்க சாமியானா பந்தல் அமைக்க வேண்டும். அதேபோல் அறிவிப்புகளை வெளியிட மைக்செட் வைக்க வேண்டும். டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதேபோல் டாஸ்மாக் கடைகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.