அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நீதிமன்றங்களும் இதுகுறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,
''கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. 2021-ல் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மிகச்சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது. ஆனால் எம்ஜிஆர் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள் மூன்றுமுறை அடி வாங்குவார் நான்காவது முறை குத்து விடுவார். அது மாதிரி வருகிற 18-ஆம் தேதி அதிமுக ஆதரவோடு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிற ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரௌபதி முர்மு மிகப்பெரிய வெற்றியினை பெற இருக்கிறார். இது அதிமுகவுக்கு கிடைக்கின்ற வெற்றி. திமுகவிற்கு கிடைக்கின்ற தோல்வி. முதல் முறையாக இந்த மூன்றாண்டு காலத்தில் திமுக தோல்வியைச் சந்திக்க இருக்கிறது'' என்றார்.