மீனவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் துயரம் என எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடிய அமைச்சரால் சட்டப்பேரவை கலகலப்பானது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் பிப்ரவரி 21 முதல் 24- ஆம் தேதி வரை நடந்தது.
இந்த நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 6- ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், மே மாதம் 10- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வரும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாள்தோறும் துறைச் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் துறைச் சார்ந்த கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அத்துடன், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (13/04/2022) சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது பேசிய கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மீனவர்களுக்கான நலத்திட்டம் உள்ளிட்டவையைப் பட்டியலிட்டார்.
அப்போது மீனவர்களின் நிலையைச் சொல்ல வேண்டுமென்றால் என பேசிய அமைச்சர், திடீரென "ஒருநாள் போவார், ஒருநாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம்" என எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடினார். அப்போது, சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, தன்னைப் பார்த்து பாடலை பாடுமாறும், பாட்டை முடித்துவிடுமாறும் கோரினார்.
எம்.ஜி.ஆர். பாடலைப் பாடியதாக கேள்வி எழுப்பியவர்களுக்கு பாடல் வந்த நேரத்தில் தி.மு.க.வின் பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்று அமைச்சர் விளக்கம் அளித்தார். மேலும், மீனவர்களின் துயரத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்றார் அமைச்சர்.
அமைச்சரின் எம்.ஜி.ஆர். பாடலால் சட்டப்பேரவை கலகலப்பானது.