அரசியல் தலைவர்களான எம்ஜிஆர் , ஜெயலலிதா என இரண்டு மாபெரும் முதல்வர்களை உருவாக்கிய தொகுதிதான் ஆண்டிப்பட்டி தொகுதி. அந்த அளவுக்கு இலைவிசுவாசிகள் பெரும்பான்மையாக இருந்து வரும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியும் இடைத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இத்தொகுதியில் முக்குலத்தோர் பிரிவில் உள்ள பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மறவர், நாயக்கர்கவுண்டர், செட்டியார், நாடார் உள்பட சில சமூகத்தினருடன் கிறிஸ்தவ முஸ்லிம் மக்களும் பெயர் சொல்லும் அளவுக்கு இருந்துவருகிறார்கள். இத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் டி.டி.வி பக்கம் சாய்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அப்படியிருந்தும் மீண்டும் தங்க. தமிழ்ச்செல்வன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் களமிறங்க போகிறார். அதனாலேயே தங்கதமிழ்செல்வனை தவிர டிடிவி ஆதரவாளர்கள் யாரும் சீட் கேட்க ஆர்வம் காட்டவில்லை. அதிமுகவில் தங்கதமிழ்செல்வன் இருந்த போது துணை முதல்வர் ஓபிஎஸ்சை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் பண்ணிக்கொண்டு தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தார். அதன் மூலம் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மாவட்டத்தில் ஆதரவாளர்கள் இருந்து வந்தனர். தற்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கதமிழ்செல்வன் பக்கம் சாய்ந்து விட்டனர். அந்த அளவிற்கு மாவட்டத்தில் ஆளும் கட்சியை உடைத்து டிடிவி பக்கம் இழுத்து இருக்கிறார். அதோடு ஜாதி ரீதியாக உள்ள கட்சி பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தங்க தமிழ்ச்செல்வன் வளர்த்து வருகிறார். டிடிவி எம்பி ஆக இருந்தபோது நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை பல அடிப்படை வசதிகளை செய்து கோயில் குளங்களுக்கு பணத்தை வாரிக் கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் டி டிவிக்கு பொதுமக்கள் மத்தியிலும் சமூகத்தினர் மத்தியிலும் நல்ல பெயர் இருந்து வருகிறது. அது போல் தங்க தமிழ்ச்செல்வனும் முடிந்த அளவுக்கு தொகுதி மக்களுக்கு உதவிகளையும் செய்து செய்திருக்கிறார்
.
அதிமுகவைப் பொறுத்தவரை இந்த இடைத் தேர்தல் மூலம் அரசியல் எதிரியான தங்க தமிழ்ச்செல்வனை ஓரங்கட்ட ஓபிஎஸ் தயாராகி வருகிறார். அதற்காகவே ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளரும் முன்னாள் சேர்மனுமான பி.கே. சமூகத்தைச் சேர்ந்த லோகி ராஜனை களமிறக்க இருக்கிறார். இந்தலோகி ராஜன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கு பல ஏக்கர் நிலம் தானமாகக் கொடுத்திருக்கிறார். அதோடு பணபலமும் இருக்கு. கட்சிகாரர்களுடன் நெருக்கமாகவும் இருந்து வருகிறார். அதுபோல் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான முன்னாள் சேர்மனும் மாவட்ட துணை செயலாளருமான ராமர், ஓபிஎஸ் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயரும் இருந்து வருகிறது. தொடர்ந்து சீட்டு கேட்டு வரும் ராமர் இந்த முறையாவது ஓபிஎஸ் மூலம் சீட்டு வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியிருக்கிறார். அதுபோல் நாயக்கர் சமூகத்தினரும் கணிசமாக தொகுதியில் இருப்பதால் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த, ஓபிஎஸ் விசுவாசியான அரண்மனை சுப்பு உள்பட 20க்கும் மேற்பட்ட ர.ர.க்களும் சீட் கேட்டு வருகிறார்கள். இருந்தாலும் லோகி ராஜன் அல்லது முறுக்கோடை ராமர் இந்த இருவரில் ஒருவரை ஓபிஎஸ் தொகுதியில் களம் இறக்கி அதன் மூலம் அரசியல் எதிரியான தமிழ்ச்செல்வனை அதிகாரம் பணம் பலம் மூலம் தோல்வியடைய வைத்து அதன் மூலம் அரசியலை விட்டு விரட்டவும் தயாராகி வருகிறராம்.
திமுகவைப் பொறுத்தவரை 1996ல்ஜெவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஆசையனுக்கு பிறகு இத்தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களை தலைமை போட்டது இல்லை. ஆனால் இந்தமுறை தொகுதிக்கு உட்பட்ட உடன் பிறப்புகளை களத்தில் இறக்க தலைவர் ஸ்டாலின் தயாராகி வருகிறாராம். அதன் அடிப்படையில் கூடலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரியும் கழக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் பி.ஏ.வாக இருந்து வரும் பி.கே. சமூகத்தைச் சேர்ந்த ராஜா சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இந்த ராஜாவின் தந்தை கருப்புத்தேவர் கூடலூர் வார்டு கவுன்சிலராக மூன்று முறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். அவருடைய மகன் தான் இந்த ராஜா. ஆரம்ப காலத்திலிருந்து திமுகவில் ஐக்கியமாகி கொண்டு ஐ.பிக்கு பி.ஏ.வாகவும் கூடலூர் நகர மக்களுக்காக அடிப்படை வசதியான 40 சுகாதார வளாகம் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அதுபோல் கூடலூர் மற்றும் உள்காடு பகுதிகளில் பொதுமக்களுக்கு கோயில்களும் தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்து கட்சிக்காரர்கள் முதல் அணைத்து சமூகத்தினர் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு கட்சிக்கு விசுவாசமாகவும் பொறுப்பாளர்களையும்அரவணைத்து வரும் ராஜா தொடர்ந்து சீட் கேட்டு வருபவர். இந்த முறையாவது ஐ.பி.ஆசியுடன் சீட்டு வாங்கி விட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். அதோடு மாவட்ட பொருளாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆசியும் ராஜாவுக்கு இருந்துவருகிறது. இதேபோல் முன்னாள் மாவட்ட பொருளாளரும் மாநில தீர்மான குழு இணைச் செயலாளருமான ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட கம்பம் ஒன்றியத்தை சேர்ந்த ஜெயக்குமாரும் சீட் கேட்டு வருகிறார். இந்த ஜெயக்குமார் மாவட்ட பொறுப்பாளராக இரண்டு வருடம் இருந்தபோது 2 லட்சம் வரை புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து கட்சியை வலுபடுத்தியும் கட்சிக்காரர்களை அரவணைத்து கொண்டே வந்திருக்கிறார். அதுபோல் ஐ.பிக்கும் விசுவாசமாக இருந்து வரும் ஜெயக்குமாரும் பி.கே. சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் தேர்தல் களத்தில் குதிக்க சீட்டுக்காக மோதி வருகிறார். அதுபோல் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் மகாராஜன், கம்பம் முன்னால் யூனியன் சேர்மன் தங்கராஜ், கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உள்பட 10க்கும் மேற்பட்ட பொறுப்பில் உள்ள உ.பி.கள் சீட்டுக்காக மோதி வருகிறார்கள்.
இந்த ஆண்டிபட்டி தொகுதியை பொறுத்தவரை துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் டிடிவி ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வனுக்கும் கௌரவப் பிரச்சனையாக இருந்து வருகிறது. இருந்தாலும் அதிமுகவின் பெரும்பான்மையான வாக்கு வங்கிகள் தற்போது டிடிவி பக்கம் சாய்ந்திருக்கிறது. அதன் மூலம் பெரும் பான்மையாக இருந்து வரும் இலை விசுவாசிகளின் மனங்களும் இரண்டு பட்டு கிடைக்கிறது . அதை திமுக சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கட்சி வாக்கு வங்கியுடன் கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும் சிதறாமல் கொண்டுவந்தாலே அதிமுக கோட்டையான ஆண்டிபட்டி தொகுதியை திமுக கோட்டையாகவும் உருவாக்க முடியும் என்ற பேச்சும் தொகுதியில் பரவலாக எதிரொலித்தும் வருகிறது.