குடவாசல் அரசு கலைக்கல்லூரி எம்.ஜி.ஆர் கலை அறிவியல் கல்லூரி என பெயர் சூட்டப்படும் - முதல்வர் பழனிசாமி
திருவாரூர், ஆக 19லில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி இனி எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி என பெயர் சூட்டப்படும் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில் புதியத் திட்டங்களை அறிவித்த போது, தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் விடுத்த வேண்டுகோளை ஏற்று குடவாசலில் அண்மையில் தொடங்கிய அரசு கலைக் கல்லூரி இனி எம்.ஜி.ஆர் கலை அறிவியல் கல்லூரி என சூட்டப்படும் என்று அறிவித்தார்.
முதல்வர் அறிவித்த பிறத் திட்டங்கள். வலங்கைமான் தாலுகாவில் உள்ள வலங்கைமான், அரித்துவாரமங்கலம், காவல் நிலையங்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் சரகத்தில் இருந்து மாற்றி திருவாரூர் மாவட்ட காவல் சரகத்துடன் சேர்க்கப்படும். வலங்கைமான், ஆலங்குடி மின்வாரிய அலுவலகங்களை தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்திலிருந்து, திருவாரூர் மின்பகிர்மான வட்டத்தில் சேர்க்கப்படும். மன்னார்குடி தாலுகா சவளக்காரனில் 110 வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் நிறுவப்படும்.
குடவாசல் பேருந்து நிலையத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி மேம்படுத்தப்படும். குடவாசல் ஒன்றியம் மணப்பறவை, குடவாசல் பேரூராட்சி ஏரூர்ந்தவாடி வழியாக, கும்பகோணம் சாலையை இணைக்கும் வகையில், சோழ சூடாமணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் மற்றும் சுற்றுச்சாலை அமைக்கப்படும். மன்னார்குடி நகராட்சியையும், கர்த்தநாதபுரத்தையும் இணைக்கும் வகையில் பாமணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்படும் என்றார் முதல்வர் பழனிசாமி.
-செல்வகுமார்