எம்.ஜி.ஆர். ஜானகி அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அதில் பேசிய அவர், " இன்றைக்கு ஜானகி அம்மாளின் நூற்றாண்டு துவக்க விழாவில் கலந்துகொண்டுள்ளது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். அவர் தனிப்பட்ட நபராகக் கருத முடியாது. தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர். எனவே அவரின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
நான் சிறுவயது முதலே எம்ஜிஆர் படங்கள் என்றால் முதல் ஆளாகச் சென்று பார்ப்பேன். சில நாட்களில் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு படம் எப்படியிருந்தது என்று எம்ஜிஆர் கேட்பார். அந்த அளவுக்கு எம்ஜிஆர் படங்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஒருமுறை அவரை சார் என்று கூப்பிட்டுவிட்டேன். அதற்காக என்னிடம் கோபித்துக்கொண்டார்.
அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தாலும் திமுகவில் அதைவிட அதிக ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 52ல் திமுகவில் இணைந்த எம்ஜிஆர் 72 வரை திமுகவிலே தொடர்ந்து இருந்து வந்தார். பல்வேறு மறக்க முடியாத சம்பவங்கள் எம்ஜிஆர் இருக்கும்போது நடந்தது தற்போதும் நினைவில் வருகிறது" என்றார்.