ஹைதராபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்று (26/05/2022) மாலை 05.45 மணிக்கு சென்னைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதைத் தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பிரதமர், ரூபாய் 2,900 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரூபாய் 28,500 கோடி மதிப்பிலான ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க.சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு ராஜ்பவன் என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடியை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய, அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்து மனதார வரவேற்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.