குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12- ஆம் தேதி திறப்பது குறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (16/05/2021) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கலாம் என்ற வேளாண் வல்லுநர்களின் கருத்துகள் குறித்தும், குறுவை சாகுபடி பரப்பு, டெல்டா ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன.
ஆலோசனைப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், "குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி குறித்து முதல்வர் அறிவிப்பார். விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். போதிய கால அவகாசம் இல்லாததால் தூர்வாரும் பணியை உடனே தொடங்கவிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.