திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வழக்கமாக நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு நாள் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைஅமலில் இருந்தால் கடந்த மார்ச் 10 தேதியிலிருந்து இந்த மக்கள் குறைத்தீர்ப்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் தங்களின் புகார் மனுக்களைக் கலெக்டர் அலுவலத்தில் உள்ள புகார் பெட்டியில் போட்டு வந்தனர். மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளதால் 83 நாட்களுக்குப் பிறகு கலெக்டர் நேரடியாகப் புகார் மனுக்களை பெற்றார். ஆனால் மக்களுக்கு தேர்தல் விதிமுறை தளர்த்தப்பட்ட செய்தி சரியாக சென்று போய் சேராததால் குறைந்த அளவிலே சுமார் 100 பேர் மட்டுமே வந்திருந்தார்கள்.
இந்த நிலையில் 19 வயது இளம் பெண் கண்ணீருடன் ஒரு புகார் மனுவை கொடுக்க வந்தார். அந்த மனுவில் என்னுடைய அப்பாவும், அண்ணனும் மாற்றுதிறனாளிகள், நாங்கள் குடும்பமாகச் சாலையோரம் பூ வியாபாரம் செய்து வருகிறோம். குடும்ப வறுமை காரணமாக எங்கள் பகுதியில் உள்ள ஜெயலெட்சுமி என்கிற பெண்ணிடம் சில மாதங்களுக்கு முன்பு 10,000 ரூபாய் கடன் வாங்கினோம். அதற்குத் தினந்தோறும் 200 ரூபாய் வட்டியாகக் கொடுத்தோம். 2 மாதம் தொடர்ந்து வட்டி செலுத்திய எனக்கு அதற்கு மேல் வட்டி கொடுக்க முடியவில்லை.
இதனால் ஜெயலெட்சுமியின் மகள் நிர்மலா என்னை வட்டி கேட்டு தினமும் டார்ச்சர் பண்ணினார். கடைசியில் நீ வட்டியும் கட்டவில்லை, எப்படி அசலை அடைக்கப் போகிறாய். நீ மேற்படி தொழில் செய். அதில் கிடைக்கும் வருமானத்தில் கொண்டு கடனை அடைத்து விடலாம் . இவர் இந்தத் தொழிலுக்குப் புரோக்கர் போல் செயல்பட்டு என்னை மிரட்டி வருகிறார்கள். தாயும், மகளும் சேர்ந்து என்னை விபச்சாரத் தொழிலில் தள்ளி விடப்பார்க்கிறார்கள் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மனுவில் கொடுத்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனே நடவடிக்கை எடுக்கும் படி மாநகர ஆணையருக்கு உத்தரவிட்டார்.