சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.
இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.
இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.
ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.