பட்டுக்கோட்டை அருகே கடற்கரையோரம் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருளை கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது.
நேற்று முன்தினம் சென்னையில் ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய மெத்தபெட்டமைன் விற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் மெத்தப்பட்டமைன் வைத்திருந்ததாக இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் போதைப்பொருள் பதுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.
அதனடிப்படையில் பட்டுக்கோட்டை கடலோர காவல் நிலைய ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிச்சைவேம்பு தலைமையிலான போலீசார் கடற்கரையோரம் ஆய்வில் ஈடுபட்டனர். அப்பொழுது பாலிதீன் பையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 950 கிராம் எடை கொண்ட மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. கடற்கரையோரம் போதைப்பொருள் சிக்கியுள்ளதால் அது இலங்கையில் இருந்து படக்குமூலம் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தற்பொழுது போலீசார் விசாரணை தொடங்கி இருக்கின்றனர்.