திருவண்ணாமலை அய்யகுளத் தெருவை சேர்ந்தவர் நரேந்திர குமார் ஜெயின். இவரது மகன்கள் ஜிதேஸ், அரிஹந்த். இவர்கள் திருவண்ணாமலை தேரடி வீதியில் நகைக்கடை வைத்து தொழில் செய்து வருகின்றனர். வழக்கமாக கடையை பூட்டி விட்டு இரவில் சகோதரர்கள் இருவரும் ஒன்றாக வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு அவர்கள் மொபட்டில் வீட்டிற்கு சென்று உள்ளனர். வழக்கமாக செல்லும் பாதை அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் இருவரும் ராமலிங்கனார் தெரு வழியாக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த கடத்தல் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமடக்கி தாக்கி காரில் கடத்திக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
பின்னர் கடத்தல் கும்பல் நரேந்திரகுமாரை தொடர்பு கொண்டு ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கையில் ரூ.10 லட்சம் தான் உள்ளது என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பணத்தை எடுத்து கொண்டு கடத்தல் கும்பல் திருவண்ணாமலை திருக்கோவிலூர் பைபாஸ் ரிங் ரோடு பகுதிக்கு வர கூறினர். அதன்பின்னர் நரேந்திரகுமார் தரப்பினர் பணத்தை எடுத்து கொண்டு திருக்கோவிலூர் பைபாஸ் ரிங் ரோடு பகுதிக்கு சென்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. போலீசார் ரகசியமாக பணம் எடுத்து சென்றவர்களை கண்காணித்தனர். ரிங் ரோடு பகுதியில் காரில் இருந்த கடத்தல் கும்பல் அவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு ஜிதேஸ், அரிஹந்த் ஆகியோரை விடுவித்தனர்.
அதன்பின்னர் போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்கும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டனர். போலீசாரை கண்டதும் அவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். போலீசார் கடத்தல் கும்பல் சென்ற காரை பின் தொடர்ந்து சென்று மேல் செங்கம் பகுதியில் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் சிக்கினர். மற்ற நபர்கள் தப்பி சென்றனர். அதன் பின்னர் அவர்களை போலீசார் மேல் செங்கம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த விக்ரம், மனோ, வாசிம் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பதும் தெரியவந்தது.
இதில் திருவண்ணாமலையை சேர்ந்த நபர்களின் தலையீடு உள்ளதாகவும், பெங்களூருவை சேர்ந்த கூலிப்படை மூலம் கடத்தல் சம்பவம் நடைபெற்று உள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.10 லட்சம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.