திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பிரபலமானது. தென்னிந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான சாதுக்கள், சாமியார்கள் என்கிற பெயரில் யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) இருக்கின்றனர். வித்தியாசமான இந்த யாசகர்களில் யாராவது ஒருவரை, சாது, ஞானி என பிரபலப்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் திருவண்ணாமலையில் உருவாகியுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிச்சைக்காரர் பசிக்கும்போது மட்டும் ஏதாவது ஒரு ஹோட்டல் அல்லது டீ கடையில் கையேந்துவார், சிலர் தருவார்கள், சிலர் 'சூடுதண்ணிய ஊத்திடுவன் போய்டு' என விரட்டிவிடுவார்கள். இட்லி, டீ தந்தால் வாங்கி சாப்பிட்டுவிட்டு அண்ணாமலையார் கொவில் அம்மணியம்மன் கோபுரம் கால்வாய் ஓரம் படுத்துக்கிடப்பார். தாடி வளர்த்துக்கொண்டு, அழுக்கு துணியுடன் எப்போதாவது யாரிடமாவது மூக்குபொடி கேட்பார். இவருக்கு வயதானதால் நடக்கமுடியாமல் தாங்கி நடக்கவும், தன்னைப் பார்த்து குறைக்கும் நாய்களை விரட்டவும் கையில் ஒரு கம்பு வைத்திருந்தார். அடிக்கடி கடைகளில் மூக்குபொடி வாங்கியதால் கடைக்காரர் ஒருவர் மூக்குபொடி சாமியார் என அழைக்க அவர் பெயரே மூக்குபொடி சாமியார் என்றானது.
மூக்குபொடி சாமியார் கையில் வைத்துள்ள கம்பால் அடி வாங்கினால், அவரிடம் திட்டு வாங்கினால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும், செல்வம் பெருகும் என சிலர் திட்டமிட்டு பரப்பிவிட்டார்கள். அதை நம்பி வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் படையெடுத்து வந்தனர். நடிகர்கள் சந்தானம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போன்ற அரசியல், சினிமா பிரபலங்கள் இந்த மூக்குபொடி சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்து தேவுடு காத்துக் கொண்டிருந்தார்.
மூக்குபொடி சாமியார் என்கிற யாசகரை பிரபலங்கள் வணங்க வரும்போது எல்லாம் டி.டி.வி.தினகரனின் நண்பரும் பிரபல ஹோட்டல் அதிபரான முத்துக்கிருஷ்ணன் என்பவர், மூக்குபொடி சாமியாருக்கு புத்தாடை அணிவித்து தனது ஹோட்டலுக்கு அழைத்து வந்து உட்கார வைத்துவிடுவார். அங்கு அவரை வணங்கிவிட்டு அவரிடம் திட்டு வாங்க காத்துக்கொண்டு இருந்தார். மூக்குபொடி சாமியார் கால் தங்கள் வீட்டில், தொழில் நிறுவனத்தில் படவேண்டும் என அவரை அழைத்தது. அந்த கும்பல், அவரை வெளிமாநிலங்கள், வெளியூர்களுக்கு அழைத்து சென்று கல்லா கட்டியது. நான்கு வருடங்களுக்கு முன்பு அவர் இறந்தபோது, அவரது உடலை கிரிவலப்பாதையில் ஒரு இடத்தில் அடக்கம் செய்து இப்போது அதை ஒரு கோயிலாக்கி கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது வயதான மனநோயாளியான ஒரு பெண்மணி வாயில் எச்சில் ஒழுக விட்டுக்கொண்டு கிரிவலப்பாதையில் எங்காவது சுற்றிக்கொண்டு இருப்பார். இவர் பெயர் தொப்பியம்மா, இவர் பெரிய ஞானி எனச்சொல்லி சிலர் பரப்பி விட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மனநோயாளி சித்தராக வடிவமைக்கப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் பிரபலப்படுத்தப்பட்டார். இப்போது கூட்டம் கூட்டமாக வந்து வணங்குகின்றனர். அவரை வைத்து சிலர் கல்லா கட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இந்த பெண்மணி மனநோயால் பாதிக்கப்பட்டு பெங்களுருவில் சுற்றிக்கொண்டு இருந்தவர், திருவண்ணாமலை வந்துள்ளார். கொரோனாவுக்கு முன்பிருந்து கிரிவலப்பாதையில் சுற்றி சுற்றி வருகிறார். இவரை பெண் சித்தராக்கியதன் விளைவாக இந்த மனநோயாளி பின்னால் எப்போதும் 10 பேர் சுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர் எச்சில் பிரசாதம் என்கிறார்கள். அவர் யாரையாவது பார்த்து எச்சில் துப்பி அது தங்கள் மீது விழுந்தால் பாக்கியம், அதிர்ஷ்டம் என்கிறார்கள்.
இந்த தொப்பியம்மா என்கிற மனநோயாளியை கடந்த மே 25ஆம் தேதி டி.டி.வி.தினகரன் கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் பார்த்து வணங்கினார். அந்த மனநோயாளி தன் மீது எச்சில் துப்புவார் என அவர் பின்னாலயே சென்றார். இந்த வீடியோ பிரபலமாகியுள்ளது. பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். பக்தி என்கிற பெயரில் மனநோயாளிகள் பின்னால் சுற்றும் இவர்கள் மனநோயாளிகளா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பக்தி இருக்க வேண்டியதுதான் அது அவர்களது தனிமனித உரிமை. ஆனால் பக்தி என்கிற பெயரில் மனநோயாளிகளையும், பிச்சைக்காரர்களையும் சாது, ஞானி என விளம்பரத்தி காசு சம்பாதிக்கும் கும்பலுக்கு இப்படி பிரபலங்கள் துணை போகலாமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.