
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அறிவழகன் (வயது 40). இவருக்கு திருமணமான நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டதால் இவரது மனைவி பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நாள்தோறும் விருத்தாச்சலம் பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் விருத்தாசலம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று இரவு அவர் சுற்றிக் கொண்டிருந்த போது அங்கே பொதுவெளியில் மது குடித்துக் கொண்டிருந்த கும்பலில் ஒருவருடைய செல்போன் காணவில்லை என்றும், அதனை திருடிவிட்டதாகவும் கூறி மனநலம் பாதிக்கப்பட்ட அறிவழகனை மதுபோதையில் இருந்த கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதனால் அடி தாங்க முடியாமல் வலியால் துடித்த அவர் கதறி அழுத போதும் மனமிறங்காத மதுபோதையில் இருந்த கும்பல் அவரை அடித்தே கொன்றனர். பின்னர் அவர் இறந்ததை அறிந்ததும் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.