மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய ஜல் சக்தித்துறைஅமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் நேரில் ஒப்படைக்க அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் குழு டெல்லி சென்றது.
இந்த குழுவின் தலைவரான தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே டெல்லி சென்றுள்ள நிலையில், குழுவில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸின் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பா.ஜ.க.வின் சட்டப்பிரிவு தலைவர்- பால் கனகராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., புரட்சிப் பாரதம் கட்சி சார்பாக பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, நாளை (16/07/2021) நேரில் சந்திக்க உள்ள இந்த குழுவினர் மேகதாது அணை விவகாரம் குறித்து வலியுறுத்தவுள்ளனர்.