மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து, அதை இலவசமாக வழங்க அனுமதி வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்” எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு நேற்று (22/04/2021) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஆக்ஸிஜன் தேவை உயர்ந்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி தரலாம்" என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, "கரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை பற்றிய அனைத்து விஷயங்களையும் நாங்களே முன்வந்து விசாரிப்போம்.” என்று கூறியதுடன், இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவை நியமித்து விசாரணையை இன்றைக்கு (23/04/2021) ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (23/04/2021) காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது போராட்டக் குழுவினர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தின்போது சிலர் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், "ஸ்டெர்லைட் ஆலையை இயக்க நிச்சயமாக தமிழக அரசு அனுமதிக்காது" எனத் தெரிவித்தார். ஆட்சியரின் பேச்சால் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சியில் மேஜையைத் தட்டினர்.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (23/04/2021) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கருத்துக் கேட்பு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.