அண்ணாமலை பல்கலைக்கழகம் குறித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மிகவும் மோசமான பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பது கண்டிக்கத்தக்கது” என ஜூலை 26ஆம் தேதி (நேற்று) விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் மனோகர் தலைமையில், இன்று (27.07.2021) பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு கொடுத்து பல்கலைக்கழக வாயிலில், சி.வி. சண்முகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே முன்னாள் ஊழியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ரவி தலைமையில் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து சி.வி. சண்முகம் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “சி.வி. சண்முகம் அவரது பேச்சைத் திரும்பப் பெற வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் பல அறிஞர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம். தற்போது அரசியலில் உள்ள பல்வேறு தலைவர்களை உருவாக்கிய பல்கலைக்கழகத்தை மோசமான பல்கலைக்கழகம் என விமர்சித்த சி.வி. சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கோஷங்களை எழுப்பினார்கள்.