Skip to main content

தேவையின்றி மூக்கை நுழைத்து வேஷம் போடும் கமல்: கி.வீரமணி கண்டனம்

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
k.veeramani dk


காவிரி நதிநீர் உரிமைப் பிரச்சனையில் மிக நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களிலும் போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எந்த உருப்படியான பலனும் தமிழ்நாட்டுக்கு கிட்டாத நிலையில் புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமலகாசன் கருநாடக முதல் அமைச்சரை தன்னிச்சையாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி காவிரி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுவது பச்சைத் துரோகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

மிக நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகு - சட்டமன்றம்,  நீதிமன்றம் முதல் வீதிமன்றம் வரை நடந்த பல போராட்டங்களுக்குப்  பிறகு காவிரி நதி நீர் ‘வாரிய’த்தின் சொல்லுக்குப் பதில் ஆணையம் (Authority) என்று அமைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

நடுவர் மன்றத்திற்குப் பின் அப்படியே உச்சநீதிமன்றம் - “கோர்ட்  டிக்கிரி” - நீதிமன்ற செயல்படுத்தப்பட வேண்டிய உத்தரவு என்ற நிலையைத் தனது தீர்ப்பில் கூறியிருப்பினும், பிறகு சுய முரண்பாடாக ஆணை பிறப்பித்தது ஏன்? ஆணையம் அமைப்பதில், அது சுட்டிக்காட்டியபடி, அணைகளை ஆணையம் (வாரியம்) தனது முழுக் கட்டுப்பாட்டில் வைக்காமல், அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிற்கே விட்டு விட்டது!
 

இதனால் நீர்ப் பங்கீட்டில், அதிக சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற அய்யமும், அறிவார்ந்த கேள்வியும் உள்ளடக்கமாக  இருக்கின்றன.
 

‘ஆணையம்’ (Authority) என்ற பெயர் சிறப்பானதுதான், ஆனால் அதன் அதிகாரம் எந்த அளவுக்குத் தமிழக விவசாயிகளின் நீர் பெறும் வாழ்வாதார உரிமைக்கு - சம்பா, தாளடி, குறுவை சாகுபடிகளுக்குத் துணை நிற்கும் என்பது இனி அது செயல்படும் முறையிலிருந்துதான் புரியும்.
 

கருநாடகத்தின் நிலைப்பாடு எத்தகையது?
 

“எங்களுக்கே நீரில்லை” என்ற கர்நாடக அரசின் (அது எக்கட்சி அரசானாலும்) ஒரே கோரஸ், சுருதி பேதமில்லா பாட்டு, அதே - ஒரே நிலைதான் எப்பொழுதுமே! அதில் வறட்சிக் காலங்களில் (Distress Formula) இரு மாநிலங்களும் பின்பற்றும் விதி முறைகள் ஆலோசனைகள் தெளிவாகவே கூறப்பட்டுள்ளன.
 

ஜூன் 12-க்கு இன்னும் ஆறே நாட்கள்தான் இடைவெளி  உள்ளது.

‘பேரு பெத்தபேரு தாக நீளுலேது!’ என்ற தெலுங்கு பழமொழிபோல ஆகிவிடக் கூடாது என்பதால் நமது உரிமையை  - வாதாடி - போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கவலையும், பொறுப்பும், தமிழக விவசாயிகள், தமிழக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுக்கு இருக்கும்; இப்போது, திடீரென்று கமலகாசன் அவர்கள் கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி அவர்களைச் சந்தித்து கூட்டாக  ஒரு செய்தியாளர் பேட்டி நடத்தி, அதில் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்ற ‘புதுக் கரடியை’ விட்டுள்ளார்!
 

யாருக்குப் பிரதிநிதி நடிகர் கமல்காசன்?
 

இவர் யாருக்குப் பிரதிநிதியாக சென்றார்? இப்பிரச்சினைதொடங்கிய கடந்த 40 ஆண்டு காலத்திற்கு மேலாக வரலாற்று ரீதியான போராட்டங்கள், சட்ட வழக்குகள் போன்றவைகளுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?

 

 


அப்பிரச்சினையின் அகலமும், நீளமும், ஆழமும், அவர் அறிந்தவரா? அரசியலில் வாக்குப் பறிப்பதற்கு  இதுபோன்ற “வித்தைகள்” அவருக்குத் தேவைப்படலாம்; ஆனால் பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும் என்ற அவரது தத்துப்பித்து உளறலுக்கு ஏதாவது நியாயம் உண்டா?
 

சுமார் 28 முறை இப்பிரச்சினை தொடங்கிய காலம் முதல் 40 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட காலமாக பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததின் விளைவுதான் திமுக - அதிமுக அரசுகள் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குகள் தொடுத்து நமது உரிமையை வென்றெடுத்திருந்தன.
 

இப்பொழுது கிடைத்த வெற்றிகூட எப்படி கிடைத்தது தெரியுமா?
 

அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; நம்மைப் போன்ற சமூக அமைப்புகளும், விவசாய அமைப்பினரும் பல முறை போராட்டங்கள் நடத்தி, சிறைச்சாலை முதல், தடியடி, துப்பாக்கிச் சூடு வரை சந்தித்து தான்  இந்த வெற்றியை ஓரளவு பெற முடிந்திருக்கிறது.

 

​    ​k.veeramani dk


 

இந்த வரலாறெல்லாம் தெரியாமல், திடீர் கட்சி துவக்கியவர்கள் இப்படி நடந்தால் அது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம் தானே!!
 

திரைப்படத்தில் ‘தசாவதாரம்’ ரசிக்கத் தகுந்ததாக இருக்கலாம்; ஆனால் அரசியல் களத்தில் இத்தகைய திடீர் அவதாரங்கள் எடுபடாது. தேவையின்றி மூக்கை நுழைத்து, தமிழ்நாட்டுப் பிரதிநிதி வேஷம் போடும் அரிதாரத்தை அவர் கலைத்து விடுவது நல்லது.

 

 

 

காவிரி நடுவர் மன்றம், அதன் இடைக்காலத் தீர்ப்பு, அதைத் துவக்கம் முதலே எதிர்த்த கர்நாடக அரசின் சட்ட மூர்க்கத்தனத்தை முறியடித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள் - இவைகளை அவர் யாரிடமாவது பாடங் கேட்டுத் தெரிந்து கொண்டு பேசுவது அவருக்கும், அவர் பதியவிருக்கும் கட்சிக்கும் நல்லது!
 

கண்டனத்திற்குரியது
 

அவரது கருத்துச் சுதந்திரம், அரசியல் அவதாரம் - போராடிப் பெற்ற விவசாயிகளின் வாழ்வுரிமைக்கு உலை வைப்பதாக அமைந்து விடக் கூடாது என்பதுதான் அனைவரது கவலைக்கும் கண்டனத்திற்கும் முக்கிய காரணமும் அடிப்படையுமாகும். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்