மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER) இன்று(16.12.2024) தன் 18 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவை எனாத்தூர், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள கலையரங்கத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியது. இந்த விழாவுக்கு அந்நிறுவனத்தின் வேந்தர் ஜெயந்தி இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் நிறுவனத்தின் கௌரவ வேந்தரும் தலைமை புரவலருமான கோமதி இராதாகிருஷ்ணன் மற்றும் இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் கலந்து கொண்டனர். டாக்டர் மோகனின் நீரிழிவு நோயிற்கான சிறப்பு மருத்துவ மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பத்மஸ்ரீ. டாக்டர் வி.மோகன் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தார். அவர் பட்டம் பெறும் மாணவர்களைத் தன்னுடைய அறிவாற்றலாலும் அனுபவத்தாலும் ஊக்குவித்தார்.
இந்த பட்டமளிப்பு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. வரவேற்புரை நிகழ்த்திய ஜெயந்தி இராதாகிருஷ்ணன், 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் சிறப்பான பயணத்தைப் பற்றியும், தரமான கல்வியை வழங்குவதை பற்றியும் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மேம்பாட்டில் இந்த கல்வி நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்பை பற்றியும் எடுத்துரைத்தார். துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் சி.ஸ்ரீதர் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து, நிறுவனம் அடைந்த முக்கியமான வெற்றிகள், பாடத்திட்ட மேம்பாடுகள், ஆராய்ச்சி முன்னேற்றங்கள், புதிய முயற்சிகள், கட்டிடவள விரிவாக்கம், மற்றும் மாணவர் நலன் உள்ளிட்ட பல்வேறு செயல் திறன்களை விளக்கினார்.
டாக்டர் வி.மோகன், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் சிறப்பான சாதனைகள் மற்றும் அங்கீகாரங்களைப் பாராட்டி, பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்தினார். மேலும், அவர்கள் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்யும் சேவை மனப்பான்மை உள்ள வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார். சுகாதாரத் துறையில் டாக்டர் வி.மோகன் செய்த அசாதாரண பங்களிப்பை மேலும் ஊக்கப்படுத்தும் படி, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் சார்பில் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
நுண்ணியல் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் தன்னை அர்ப்பணித்து, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர். சுரேஷ் பாபுவுக்கு “D.Sc (Honoris Causa)” பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் 705 இளங்கலை மாணவர்கள், 103 மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் 24 முனைவர் பட்ட மாணவர்கள் என மொத்தம் 832 பேர் தங்கள் பட்டங்களைப் பெற்றனர். மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங், மருத்துவம் சார்ந்த அறிவியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் மாணவர்கள் 76 பேர் தங்கள் படிப்பில் தனித்துவமான வெற்றியை அடைந்ததற்காக பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
விழாவின் சிறப்பான தருணமாக மருத்துவ (MBBS) பட்டமளிப்பு மாணவி ஹரிதா குமாரி பி.எல், மொத்தம் 11 பதக்கங்களைப் பெற்று அதிக பதக்கங்களைப் பெற்ற சாதனையாளராக இருந்தது தான். இவ்விழாவில், இந்நிறுவனத்தின் எட்டு சிறந்த பழைய மாணவர்களுக்கு “கோமதி இராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த பழைய மாணவர் விருது 2024” வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மற்றொரு பெருமைமிகுந்த தருணமாக, அன்பாக “இட்லி பாட்டி” என அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு ஜெயந்தி இராதாகிருஷ்ணன் பரிசு (மகத்தான மனிதாபிமான சேவைக்கான விருது 2024) வழங்கப்பட்டது. சமுதாயத்தின் பொருளாதார சவால்களை சந்திக்கும் மக்களுக்கு மலிவான உணவுகளை வழங்கும் தன்னலமற்ற சேவைக்காக பிரபலமான கமலாத்தாள், கருணை மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக கவுரவிக்கப்பட்டார். அவருடைய மிகச் சிறந்த மனிதாபிமான முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில் 2 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. அனைவருக்கும் ஊக்கம் அளித்து என்றும் நினைவில் நிற்கும் இந்த நிகழ்வு தேசிய கீதம் முழங்க நிறைவடைந்தது.