ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாவுக்கு ‘தமிழகத்தின் சிறந்த பெண் சட்டமன்ற உறுப்பினர்’ என்ற விருதினை வழங்கி கவுரவித்தது திருவனந்தபுரம் ரோட்டரி கிளப். இதை அறிந்த உள்ளூர்வாசிகள் ‘நம்ம ஊரு எம்.எல்.ஏ.வுக்கு மகளிர் தினத்தன்று கேரளாவில் விருது தந்திருக்கிறார்களே! எம்.எல்.ஏ. என்ற முறையில் தொகுதியை அப்படி ஒன்றும் சிறப்பாக கவனிக்கவில்லையே?’ என்று முணுமுணுத்தனர்.
விருது பெற்ற உற்சாகத்தினாலோ என்னவோ, சந்திரபிரபா எம்.எல்.ஏ., தொகுதி மக்களுக்காக நல்ல காரியம் ஒன்றை செய்திருக்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு திடீரென்று 6 ½ வருடங்களுக்கு சொத்து வரியை உயர்த்தியது ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி. இதுகுறித்து, சந்திரபிரபா எம்.எல்.ஏ.விடம் தொகுதி மக்கள் முறையிட்டனர். 6 ½ வருடங்களுக்கு போடப்பட்ட அரியர் சொத்து வரியை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவரும் தாமதிக்காமல் சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையாளரைச் சந்தித்து மக்களின் கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாக ஆணையர் 6 ½ வருடங்களுக்கு போடப்பட்ட சொத்துவரியை ரத்து செய்துவிட்டார். பிறகென்ன? ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.