Skip to main content

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் சரமாரி கேள்விகள்

Published on 16/12/2024 | Edited on 16/12/2024
DMK MPs barrage of questions in Parliament

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.பி.க்கள் தினமும் பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் திணறடித்து வருகின்றனர்.

அந்த வகையில், 16-ந்தேதி (இன்று) திமுக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் பதிலளித்தனர்.

1 . மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்றுவழி என்ன?

நீலகிரி எம்.பி.யும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, "பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏற்ற முறையான கழிவறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகிறார்கள்" என்று  சுட்டிக்காட்டி பேசிய அவர், ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் பற்றிய வெளிப்படையான அறிக்கையை வெளியிடுமாறு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சரை வலியுறுத்தினார்.

 2.    அபாயகரமான கழிவுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதியா?

சில நிறுவனங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட அபாயகரமான கழிவுகளை சரியான அனுமதி இல்லாமல் சுதந்திரமாக இறக்குமதி செய்கின்றன எனும் செய்தி குறித்து ஒன்றிய அரசிடம் மக்களவையில் பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரசிடம் இரசாயனக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்காக பதிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் உள்ளதா என்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் விதியை மீறி இறக்குமதி செய்பவர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை மற்றும் அப்புகார்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களையும் வெளியிடுமாறு அவர் கோரியுள்ளார்.

 
3.    வாய்ப்புகளை வழங்கியதா வேலைவாய்ப்பு மையங்கள்?

நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் திறன் மேம்பாட்டு திட்டங்களை ஒன்றிய அரசு வழங்குவது குறித்து திருவண்ணாமலை திமுக எம்.பி. சி. என். அண்ணாதுரை இன்று மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொழில் திறன் மேம்பாடு மற்றும் ஆலோசனைத் திட்டங்கள், வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு மையங்களின் செயல்திறனை ஒப்பிடும் ஆய்வறிக்கை மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்கள் வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் முழுமையாக பயனடைவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவவைகளின் விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என அவர் தனது அறிக்கையில் கேட்டுள்ளார்.  

 
4.    கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

நடப்பு நிதியாண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியின் சதவிகிதம் எத்தனை என கேட்டு ஆரணி தொகுதி திமுக எம்.பி. தரணிவேந்தன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். பயிற்சி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட முதன்மை, இடைநிலை, உயர்கல்வி, தொழிற்கல்வி போன்றவற்றிற்கு பிரிவுவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி, தமிழ்நாட்டில் எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை வழங்குவதற்காக ஒன்றிய அரசின் எந்தெந்த திட்டங்களுக்கு இந்நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது மற்றும் மொத்த ஜிடிபியில் கல்விக்கான ஆறு சதவீதத்தை எட்டுவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன போன்ற விவரங்களையும் கேட்டுள்ளார்.

 
5.    கீழடி அறிக்கைகள் – தாமதம் ஏன்?

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட கீழடி முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் அச்சிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படுவதில் இன்னும் தாமதம் ஏன் என்று ஒன்றிய அரசிடம் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் பட்டியல் அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்பட்ட தேதியுடன் வெளியிட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

-இப்படி திமுக எ.பி.க்கள் தினமும் கேள்விகள் கேட்டு திணறடித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்