கொள்ளிடம் பெரிய பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்றுவந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ளது தைக்கால் கிராமம். அங்கு இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்குள்ள பள்ளிவாசலுக்கு அருகில் தாவூதின் என்பவர் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்த பள்ளிவாசலுக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் தபால்காரர், ஷேக்தாவூதினிடம் கொடுத்து செல்வது வழக்கம். இவர் கடிதத்தை வாங்கி பள்ளிவாசலில் கொடுத்து விடுவார்.
இந்தநிலையில் இரண்டு நாட்கள் கடைவீதி விடுமுறை விட்டிருக்கிறார். அஞ்சல்காரரோ, இரண்டுநாட்களாக வந்த கடிதத்தை கடையில் உள்ள இடுக்கின் வழியாக உள்ளே போட்டுவிட்டு சென்றிருக்கிறார். மூற்றாவது நாள் கடையை திறந்ததும், கடிதத்தைப் பார்த்ததும் பள்ளிவாசலில் உள்ளவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் படித்துப் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த கடிதத்தில் "பள்ளிவாசலில் இந்த மாத இறுதியில் குண்டு வெடிக்கும்," என்றும் இதை ஆச்சாள்புரத்தை சேர்ந்தவர்கள் வைத்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பிட்டிருந்தது. இந்த கடிதம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர். ஆனால் வெடிகுண்டு வைத்துள்ளதற்கான எந்தத் தடையும் சிக்கவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து விசாரிக்கிறார்கள். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.