நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தாமிரபரணி ஆறு 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அப்படிப்பட்ட தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் காலாவதியான மருந்து கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதேபோல் இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்படுவது பெரும் வேதனை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு அடிக்கடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த ஊரடங்கு காலத்தில் ஆள் நடமாட்டமில்லாத தாமிரபரணி ஆற்றின் உடையார்பட்டி பகுதியில் இவ்வாறு மருந்துகள் கொட்டப்படுகிறது. கால்நடைகள் அதிகம் மேய்ச்சலுக்கு வரும் இந்தப் பகுதியில் மருந்து அட்டைகளை, பாலித்தீன் கவர்களை சாப்பிடுவதால் கால்நடைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்ற நபர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.