தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 06.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருந்துக்கடைகள் மட்டும் காலை முதல் இரவு வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறையினரின் கெடுபிடி காரணமாக மருந்துக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடைகளிலிருந்து வீட்டிற்குச் சென்று வருவதில் சிரமம் இருந்து வந்தது. இதனால் மருந்து வணிகர்கள் தனி அனுமதி அட்டை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள மருந்துக் கடைகளின் உரிமையாளா்கள், ஊழியா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 மருந்துக்கடைகளின் உரிமையாளர்களுக்கு அடையாள அட்டைகளை நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா வழங்கினார். நிகழ்ச்சிக்கு மருந்து ஆய்வாளர் சைலஜா முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் மகாராஜன், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலாளர் வெங்கடசுந்தரம், மொத்த மருந்துப் பிரிவு தலைவா் பிரகாஷ், நகர மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் கலியபெருமாள், செயலர் பலராமன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கடலூா் மாவட்ட மருந்து வணிகர்கள் சார்பில் 1,000- க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கும், நகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கும் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கியதாகத் தெரிவித்தனர்.