அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், தங்களது கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 2400 அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகள் நடத்தப்படுவதாகவும், தங்களுடைய பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அரசு பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம், போதிக்கும் முறை, உதவிகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று (08/12/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், 7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கக் கோருவது பற்றி பதில் தேவை என்று கூறி தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், உயர் கல்வித்துறைச் செயலாளர் ஜனவரி 5- ஆம் தேதிக்குள் பதில் தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.