நாடு முழுவதும் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள் 2022 ஆண்டிற்கான நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்விற்கான முடிவு வெளியிடும் தேதிகள் மாற்றப்பட்ட நிலையில் இறுதியாக தேசிய தேர்வு முகமை செப்டம்பர் 7ம் தேதி (நேற்று) இணையத்தின் வாயிலாக இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளை www.neet.nta.nic.in என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான முடிவின்படி, ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு எழுதிய 17.64 லட்சம் பேரில் ஒட்டுமொத்தமாக 9,93,069 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில் 2,82,184 பேரும், ஓபிசி பிரிவில் 4,47,753 பேரும், எஸ்சி பிரிவில் 1,31,767 பேரும், எஸ்டி பிரிவில் 47,295 பெரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், இ.டபிள்யூ.எஸ் பிரிவில் 84,070 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2,717 பேரும் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து 1,32,167 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த திருதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 30 வது இடத்தை பிடித்துள்ளார், தமிழ்நாட்டில் 51.3 சதவீத தேர்ச்சி பெற்றதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
ராஜஸ்தானில் படிக்கும் ஹரியானாவைச் சேர்ந்த தன்ஷிகா என்ற மாணவி 715 மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த வத்சா ஆசிஷ் பத்ரா, கர்நாடகாவை சேர்ந்த ரிஷிகேஷ் ஆகியோர் 715 மதிப்பெண்களுடன் அடுத்தடுத்த இடம் பிடித்துள்ளனர். நீட் தேர்வு எழுதியவர்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் நடைமுறைகள் தொடங்க உள்ளன.