
தமிழ் வழி கல்வியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் வரும் 02.07.2018 திங்கள்கிழமை மருத்துவ கவுன்சில் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக Tech For All என்ற நிறுவனத்தின் ராம்பிரசாத் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், Tech For All என்ற App-ல் 3668 பேர் பயன் அடைந்தனர். அதில் 1675 பேர் தமிழ் வழி பயின்ற மாணவர்கள். இதில் கிரேஸ் மார்க் கொடுத்தால் மருத்துவ பட்டியலில் தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆகையால் மருத்துவ கவுன்சில் நடப்பதை தள்ளி வைக்க வேண்டும். 7 ஆயிரம் மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்தற்கு தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் இதுவரைக்கும் தமிழக அரசு அதற்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இவற்றிற்கு விடை கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ் வழி கல்வியில் படித்தோர், கருணை மதிப்பெண்கள் கிடைத்தால் நீட் மதிப்பெண்கள் எவ்வளவு பெறுவார்கள், அதை பொறுத்து தர வரிசை எவ்விதம் இருக்கும் என்று நாங்கள் ஒரு பட்டியல் தயார் செய்தோம். இந்த பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் அதனை தொடுத்த டி.கே.ரங்ராஜனிடம் மனுவை அளிக்க இருக்கிறோம்.
டி.கே.ரங்கராஜன் தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வரும் திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர் பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.