
இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் முன்னிலையில் விழா துவங்கியது.
இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு போன்றோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தின் மீது பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்துகிறார். தமிழகத்தின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனிக்கிறார். தாய் மொழியில் பொறியியல் பயில்வோர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. தமிழ் வழி பாடத்திட்டங்களை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் ஏற்படுத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.” எனக் கூறினார்.