மதிமுக சார்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் இந்த அதிநவீன ரயிலை பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 24) தொடங்கி வைக்கிறார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு மதியம் 1:50 மணிக்குச் சென்றடையும். 652 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கிறது. இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதே சமயம் மறு மார்க்கமாகச் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2:50 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:40 மணிக்குத் திருநெல்வேலிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த ரயிலுக்கான கட்டண விவரங்களைத் தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டு இருந்தது. அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏசி சொகுசு வகுப்புக்கு ரூ. 3,025 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உணவு, ஜிஎஸ்டி, அதிவிரைவு கட்டணம், முன்பதிவு என அனைத்துக் கட்டணங்களும் அடங்கும். அதேபோன்று சாதாரண ஏசி சேர் கேர் கட்டணம் ரூ. 1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக் கோரி மதிமுக சார்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி கோவில்பட்டி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.