திரைப்பட துறையில் சாதனை புரிந்ததை கவுரவப்படுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இதனை மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் விருது அறிவிப்பை அடுத்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் கலையுலகம் கொண்டாடும் பொன்விழா நாயகன் ரஜினிக்கு சிறப்பு விருது பெற முழு தகுதி உண்டு என வைகோ கூறியுள்ளார்.