Skip to main content

மருத்துவத்துறை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தர்மபுரி அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

 

mbbs students dharmapuri government medical college doctor suspended


தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மாணவிகளிடம் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில், தடயவியல் துறை உதவி பேராசிரியர் சதீஸ்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். 

 

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தடயவியல் மருத்துவத்துறை உதவி பேராசிரியராக சதீஸ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லைகள் தந்ததாக  புகார் எழுந்தது. 

 

இது தொடர்பாக, இக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மருத்துவக்கல்லூரி இயக்குநர், கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது, நாங்கள் கடந்த 2020- ஆம் ஆண்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறோம். இங்கு உதவி பேராசிரியராக உள்ள சதீஸ்குமாரால் நாங்கள் வகுப்பில் பல்வேறு அசவுகரியங்களை அனுபவித்து வருகிறோம். 

 

வகுப்பில் சில மாணவிகளின் தலையில் வருடுவது, இரட்டை அர்த்த சொற்களை பேசுவது, மாணவிகளின் பின்னால் நின்றுகொண்டு மேலே சாய்வது, சிலர் மீது உரசுவது, மாணவிகளை பாட்டு பாடச் சொல்வது, மாணவிகளைச் சுற்றி சுற்றி வந்து பாடம் நடத்துவது என வரம்பு மீறி செயல்படுகிறார். இதனால் அவருடைய வகுப்பை நாங்கள் புறக்கணித்து வந்தோம். 

 

mbbs students dharmapuri government medical college doctor suspended

 

இதனால் எங்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க மருத்துவர்கள் கண்மணி, காந்தி உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையில் மருத்துவர் சதீஸ்குமார் மீதான புகார்கள் அனைத்தும் ஊர்ஜிதமானது. 

 

இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. அப்போது அவர், தன் மீது கூறப்பட்ட அனைத்துப் புகார்களும் பொய்யானவை என பதில் அளித்தார். எனினும், மூவர் குழு விசாரணையில் புகார்கள் உண்மை எனத் தெரிய வந்ததால் அவரை பணியிடை நீக்கம் செய்ய இயக்குநரகம் உத்தரவிட்டது. அதையடுத்து அவர் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். 

 

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுகையில், ''மருத்துவர் பணி என்பது மக்களை காக்கும் மகத்தான பணி. அவர்கள் எந்த வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். மருத்துவர் சதீஸ்குமார் மீது புகார் வந்த உடனே, மூவர் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார். 

 

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே தடயவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் மதன்ராஜ், வகுப்பில் இரட்டை அர்த்த சொற்களைப் பயன்படுத்தியதாக வந்த புகாரின் பேரில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

 

இந்நிலையில், மீண்டும் மருத்துவர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்