கன்னியகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா என்பவர் இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக சமீபத்தில் பதவி உயர்வு பெற்றார். தமிழகத்தில் இருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா ஆவார். இந்த செய்தியை இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு டுவிட்டரில் நேற்று பகிர்ந்து இருந்தனர்.
இந்த டுவீட்டை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டை தெரிவித்திருந்தார். இதையடுத்து திடீரென வட கிழக்கு ராணுவம் அந்த பதிவை நீக்கியது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து சென்னை மண்டல பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர், ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் வடகிழக்கு ராணுவம் தற்போது அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டில் இருந்து தேர்வான முதல் பெண் ராணுவ ஜெனரலை வாழ்த்துகிறோம். ராணுவ அதிகாரிகள் தலைமையகத்துக்கு முன்பே வடக்கு கமாண்ட் பதிவிட்டதால் தான் அந்த குறிப்பிட்ட டுவீட் நீக்கப்பட்டது” என தெரிவித்துள்ளது. முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில், “தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை வடக்கு மண்டல ராணுவ பிரிவு ஏன் நீக்க வேண்டும். இதன் பின்னணி என்ன” என கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.